இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வுல்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான 83 வயதுடைய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியர் ரிச்சர்ட் வுல்ப், ரஷ்யா டுடே தொலைக்காட்சி சேனலுக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில்,
ஒரு காலத்தில் அமெரிக்கா உலக வல்லரசாக விளங்கியது உண்மைதான். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. ஜி7 கூட்டமைப்பைவிட பிரிக்ஸ் கூட்டமைப்பு மிகவும் வலுவாக இருக்கிறது.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன.
சர்வதேச அளவில் இந்த 7 நாடுகளின் பொருளாதாரம் 28 சதவீதமாக உள்ளது. அதேநேரம் ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய 10 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸின் பொருளாதாரம் 35 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. உலகின் பொருளாதார மையமாக பிரிக்ஸ் உருவெடுத்திருக்கிறது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது ஆகும்.
இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதன் மூலம் அமெரிக்கா தனது காலில் தானே சுட்டுக் கொண்டிருக்கிறது.
மத்திய கிழக்கில் உள்ள சிறிய நாடுகளான சிரியா, லெபனானோடு அமெரிக்காவால் மோத முடியும். இதுபோன்ற சிறிய நாடுகளுடன் மோதுவதால் அமெரிக்காவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆனால் இதே அணுகுமுறையை இந்தியாவுடன் கடைபிடிக்க முடியாது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது.
ஆரம்ப காலம் முதலே இந்தியா, ரஷ்யா இடையே ஆழமான நட்புறவு நீடிக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகளால் இந்தியா, ரஷ்யா இடையிலான உறவு மேலும் வலுவடைந்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தவறுகள் வரலாற்றில் பதிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.